--- --:--:-- --

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடம் …! மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையில் முதல்வர் எடப்பாடி பெருமிதம்!!

33

அதிக கொரோனா பரிசோதனையிலும், சிறப்பான சிகிச்சையிலும் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மார்ச் 24-ந் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 4 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. அடுத்தடுத்து 6 கட்டங்களாக போடப்பட்ட இந்த ஊரடங்கில் அவ்வப்போது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ளது.

 

ஆனாலும் தமிழகத்தில் கொரோனா பரவல் இப்போது தான் படு வேகமெடுத்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் அதிக தொற்று பாதிப்பு இருந்த நிலையில் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இந்த நேரத்தில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? கூடுதலாக என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என தமிழக அரசுத் தரப்பில் தீவிர ஆலோசனை நடத்தப்படுகிறது.

 

அதன் ஒரு கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

 

Subscription

 

தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக பரிசோதனை நடத்தப்பட்டதும், சிறப்பான சிகிச்சை வழங்கியதிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் விகிதமும் தமிழகத்தில் 73 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கவும் தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 46 லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனாவை தடுக்க சித்த மருந்தாக கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

 

இந்த கொரோனா ஊரடங்கிலும் ரூ.30 ஆயிரத்து 500 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமும் தமிழகம் தான். இதனால் 67 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளன.

 

கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சையில் தமிழக அரசு சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. இப்பணியில் மருத்துவ, சுகாதார மற்றும் அரசின் அனைத்து துறையினரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் என முதல்வர் எடப்பாடி பேசினார்.

 

இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், நாளை மருத்துவ நிபுணர்கள் குழுவினருடனும் முதல்வர் எடப்பாடி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகே கொரோனா ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? அல்லது மேலும் எந்தெந்த தளர்வுகளை அறிவிப்பது என்பது குறித்து முடிவு தெரியும் என்றும் கூறப்படுகிறது.

 

இதில் மாவட்டங்களுக்குள் அல்லது மண்டலங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon