குற்றம் குற்றமே செய்தி எதிரொலி : தடயத்தை மறைக்க சாலையோரம் வீசப்பட்ட சத்துமாவு மூட்டைகள் இரவோடு எரிப்பு .!விசாரணைக்கு சென்ற அதிகாரி “திடுக்”!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், கர்ப்பிணிகள், சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய இணை உணவு எனப்படும் சத்து மாவு பாக்கெட்டுகள் மூடையாக மூடையாக டன் கணக்கில் சாலையோரம் கொட்டப்பட்டு இருந்தது குறித்து நமது குற்றம் குற்றமே இதழ் மற்றும் இணைய தளத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இதன் எதிரொலியாக மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர் சம்பவ இடத்திற்கு இன்று விசாரணைக்காக சென்றார். அப்போது அவர் கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. இரவோடு இரவாக அனைத்து சத்து மாவு பாக்கெட்டுகளும் அவசரமாக தீ வைத்து எரிக்கப் பட்டு சாம்பலாகி கிடந்தது. இதனைக் கண்ட சம்பந்தப்பட்ட அலுவலர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழக அரசின் சார்பில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுவது போல், பால்வாடி குழந்தைகள், கைக் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட அருமையான திட்டங்களில் ஒன்று தான் இணை உணவு வழங்கும் திட்டம்.

 

சமூக நலத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.குறிப்பாக கிராமப்புற ஏழைகளுக்கு வரப்பிரசாதம் போன்ற திட்டம் தான் இந்த இணை உணவு வழங்கும் திட்டம். கிராமப்புறங்களில் சத்து மாவு என்று கூறப்படும் இந்த ஊட்டச்சத்து மாவை குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்டோர்க்கு வழங்கி ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

 

குற்றம் குற்றமே செய்தி எதிரொலி

 

இந்த கொடுமையான கொரோனா காலத்தில் கடந்த 4 மாதங்களாக அங்கன்வாடிகள் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால், இணை உணவான இந்த சத்து மாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை பயனாளிகளின் வீடு தேடிச் சென்றே பணியாளர்கள் வழங்குவார்கள் என்றே அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

 

ஆனால் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சாலையோரம் டன் கணக்கில் குப்பைக் கிடங்கில் இந்த இணை உணவுப் பாக்கெட்டுகள் வீசப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இது தொடர்பாக விரிவாக நமது குற்றம் குற்றமே இதழ் மற்றும்  இணையதளத்தில் நேற்று நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

 

சத்துமாவு மூட்டைகள் “தீ” வைத்து  எரிப்பு .!

 

ஏழை மக்களுக்கு சேரவேண்டிய இந்த உணவுப் பாக்கெட்டுகளை காலாவதி ஆகும் வரை வைத்திருந்துவிட்டு, சாலையோரம் பகிரங்கமாக கொட்டிய சம்பவம் குறித்து, இந்த இணை உணவு பொருட்களை சப்ளை செய்யும் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளர் தங்கசாமியிடம் கேட்டதற்கு, நாங்கள் தான் சாலையில் கொட்டினோம். உங்களால் என்ன செய்ய முடியும்? யாரும் எங்களை கேட்க முடியாது என தெனாவட்டாக பதிலளித்தது குறித்தும், மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர் சரவணனிடம் நாம் விஷயத்தை கொண்டு சென்றிருந்தோம். இந்நிலையில் இன்று காலை சத்து மாவு பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு நேரில் விசாரணை நடத்த உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சரவணன் சென்ற போது திடுக்கிட்டார்,

அங்கு நேற்று கொட்டப்பட்டிருந்த அத்துணை சத்து மாவு மூடைகளும் தீயில் எரிந்து சாம்பலாகி கிடந்தன. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாக, தடயங்களை மறைக்க நள்ளிரவில் தீ வைத்துள்ளனர் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது.சாதுர்யமாக செயல்படுவதாக கருதி, தீ வைத்து எரித்த செயல் சம்பந்தப்பட்டவர்களுக்கே இப்போது எதிராக திரும்பியுள்ளது என்பதே கண்கூடாகத் தெரிய வந்துள்ளது.


கருப்பு ஆடுகள் மீது உரிய நடவடிக்கை பாய வேண்டும்

 

இப்படி சத்து மாவு பாக்கெட்களை சாலையில் வீசி விட்டு, பிரச்னை என்றவுடன் தடயத்தை மறைக்க தீவைத்தும் எரித்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகளுக்கு சேர வேண்டிய இந்த சத்து மாவு உணவுப் பொருள் விஷயத்தில் அலட்சியம், அராஜகம் என செயல்பட்ட சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசுத் தரப்பு கருப்பு ஆடுகள் மீது உரிய நடவடிக்கை பாய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 


Leave a Reply