சாத்தான்குளம் தந்தை-மகன் சித்திரவதை கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக ஜெயராஜின் வீடு, சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை என வழக்கில் தொடர்புடைய இடங்களிலும் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கை சிபிசிஐடி முதலில் விசாரித்த நிலையில் அவர்களிடம் உள்ள விசாரணை தகவல்களுடன் தாங்கள் சேகரித்த விவரங்களை சிபிஐ அதிகாரிகள் ஒப்பிட்டு ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் பெண் காவலர் பியுலா செல்வகுமார் அளித்த தகவல்களில் முரண்பாடு இருப்பது தெரிய வந்ததாக தெரிகிறது.
இதனால் பெண் காவலர் பியுலாவை கைது செய்து விசாரிக்க சிபிஐ காவல் துறையினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 28 ஆம் தேதி இடைக்கால விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் வாக்குமூலங்களை ஆவணப்படுத்தும் பணியையும் சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 10 காவலர்களிடம் மனித உரிமை ஆணையம் டிஎஸ்பி குமார் தலைமையில் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.