--- --:--:-- --

டிசம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு புயல் வர வாய்ப்பு – வானிலை ஆய்வு மைய இயக்குனர்

3

19ம் தேதி மிக தீவிரப் புயலாக அக்வான் புயல் வலுப்பெற்று, அதற்கு மறுநாள் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்க உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை தெரிவித்துள்ளார். சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை அளித்த பிரத்யேகப் பேட்டியில், “தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் ‘அக்வான்’ (AQVAN) புயலாக வலுபெற உள்ளது. ​இது இலங்கையிலுள்ள திருகோணமலையிலிருந்து 650 கி.மீ. கிழக்கேயும், சென்னையிலிருந்து 1,120 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும் நிலை கொண்டுள்ளது.

 

​இந்தப் புயல் நாளை (நவம்பர் 17) மாலைக்குள் தீவிரப் புயலாகவும், நவம்பர் 19-ம் தேதிக்குள் மிக தீவிரப் புயலாகவும் வலுபெறக்கூடும். ​கரையைக் கடக்கும்போது இது தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. ​அடுத்த 5 நாட்களுக்குத் தமிழக கடலோரப் பகுதி மீனவர்கள் மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

​நவம்பர் 18 முதல் 20 வரை வங்கக்கடலின் உள்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 130 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லக்கூடாது. ​சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழையும், நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 

நவம்பர் 18 முதல் 20 வரையிலான நாட்களில் கடலில் அதிகப்படியான சீற்றமும், பலத்த காற்றும் இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை டிசம்பர் முதல் வாரத்தில் தீவிர மழைக்கு வாய்ப்பிருக்கிறது. டிசம்பர் மாதத்தில் தமிழகத்திற்குப் புயல் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 

அக்டோபர் 1 தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் 6 சதவீதம் மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தற்போது வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 44 சதவீதம் இயல்பை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது. மேலும் ஈரோடு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், தஞ்சாவூரில் மிகக் குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது” எனக் கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon