6 ஆயிரம் பேருக்கு கொரொனா பரிசோதனை நடத்தாமலேயே கொரொனா நெகட்டிவ் என சான்றிதழ் கொடுத்த மருத்துவர்..!
வங்காள தேசத்தில் இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரொனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்காளதேசத்தில் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு மிக அதிகம் என பல்வேறு தரப்பும் கூறி வருகின்றனர். கொரொனா பரிசோதனைகள் மிகக்குறைவாக செய்யப்படுவதாகவும் உயிரிழப்புகள் கணக்கில் காட்டப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந்தநிலையில் கொரொனா பரிசோதனைகள் குறித்து தனியார் மருத்துவமனைகளில் மோசடி நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல மருத்துவமனை இயக்குனர் கொரொனா பரிசோதனை செய்யாமலேயே 6,000 பேருக்கு போலியாக தொற்று இல்லை என நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மருத்துவமனையின் இயக்குனர் முகமது ஹஷீத் தனது மருத்துவமனையில் இலவசமாக கொரொனா பரிசோதனை செய்வதாக அந்நாட்டு அரசிடம் கணக்கு காண்பித்து வந்துள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சோதனை செய்யாமல் பணம் வாங்கிக்கொண்டு கொரொனா இல்லை என போலியாக சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து முகமது ஹஷீத்தின் மருத்துவமனையில் அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சோதனையில் முகமதுவின் மருத்துவமனையில் 10,500 கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியது. 4,200 கொரொனா பரிசோதனைகள் மட்டுமே உண்மையாக நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது என்று 6,300 சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டதும் தெரியவந்தது.
எனவே போலீசார் அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கினார். அவர் தலைமறைவானார் .இந்நிலையில் ஒன்பது நாட்கள் நீண்ட தேடுதலுக்குப் பின் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.






