இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இன்று முதல் விமான சேவை தொடங்க உள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார் . டெல்லியிலிருந்து நியூயார்க்கிற்கு ஏர் இந்தியா நிறுவனம் தினசரி விமான சேவையும், சான்பிரான்சிஸ்கோவிற்கு வாரத்திற்கு மூன்று விமானங்களும் இயக்கப்பட உள்ளன.
31ம் தேதி வரை அமெரிக்காவிற்கு மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவை தொடங்க உள்ளது. பாரிசிலிருந்து ஏர் பிரான்ஸ் மூலம் டில்லி, பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களுக்கு நாளை முதல் ஆகஸ்டு 1ஆம் தேதி வரை 28 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
இதேபோன்று ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துடன் விமான சேவையை தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். வெளி நாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப் படுத்துவது போன்ற விதிமுறைகள் நிச்சயமாக கடைபிடிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரொனா நோய் தொற்று காரணமாக கடந்த மார்ச் 2-ஆம் தேதி சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.