கோவை மாநகரத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுந்தராபுரம் அருகே பெரியாரின் முழு உருவச்சிலை அமைந்துள்ளது.இது கடந்த 1995-ம் ஆண்டு கோவையில் நிறுவப்பட்ட மூன்று முக்கிய சிலைகளில் ஒன்றாக இருக்கிறது. திராவிட கழக தலைமையால் திறந்து வைக்கப்பட்ட இந்த சிலை அருகே பல்வேறு விதமான போராட்டங்களும், பல்வேறு விதமான பெரியாரின் சிந்தனை நிகழ்ச்சிகளும் விழாக்களும் நடைபெறுவது வழக்கம்.
இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக பெரியாரியல் சிந்தனையாளர்கள் மற்றும் வலதுசாரி சிந்தனை என்ற கருத்து மோதல் நிலவியதன் அடிப்படையில் தற்போது அசம்பாவிதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில் மர்ம நபர்கள் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்தபோது காவி சாயத்தை பெரியார் சிலை மீது பூசி விட்டு சென்றுள்ளனர்.
இதனை அறிந்த தொண்டர்கள் இன்று காலை அந்த பகுதியில் குழுமியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் அறிந்த குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவல்துறையின் மற்ற அதிகாரிகள் காவலர்கள் அந்த பகுதிக்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
இந்த சூழ்நிலையில் அப்பகுதியில் பெரியாரின் சிந்தனையை முன்னிலைப்படுத்தி போராட்டம் நடைபெற்றது. கோஷங்களை எழுப்பிய தொண்டர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் மதிமுக தொண்டர்கள் உடனடியாக காவி சாயம் பூசிய மர்ம நபரை கைது செய்ய வேண்டும் எனவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.பதற்றம் காரணமாக கோவை சுந்தராபுரம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெரியார் சிலை அவமதிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ,பா.ம.க நிறுவனர் ராமதாஸ்,வி.சி.க தலைவர் திருமாவளன் உள்ளிட்ட பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.மேலும்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் யார் தவறு செய்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோட்டில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோவை போத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.எதற்காக இவ்வாறு செய்தார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணைக்கு பின்னலே முழு விவரமும் தெரிய வரும்.இச்சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.