தன்னைக் கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் கையை கடித்து விட்டு சாதுரியமாக தப்பி சென்ற சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை பெரவல்லூரை சேர்ந்த சிறுமி சாலையில் சென்று கொண்டிருந்த போது ஹெல்மெட் அணிந்து ஆட்டோவில் வந்த நபர் சிறுமியின் முகத்தில் மயக்க மருந்தை தடவி கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.
உடனடியாக சுதாரித்துக்கொண்டு சிறுமி ஆட்டோ ஓட்டுநரின் கையை கடித்து விட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த செம்பியம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிசிடிவி ஆதாரங்களுடன் ஹரி பாபு என்பவரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அச்சிறுமியை நேரில் அழைத்து பாராட்டு தெரிவிக்கும் படி காவல் ஆணையரை தொடர்புகொண்டு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் சிறுமியை கடத்த முயன்ற வேலை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரையும் பாராட்டுவதாக முதலமைச்சர் கூறினார்.