தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் – காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்த பிறகு நீதிமன்றம் தலையிடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்ததை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லபாண்டியன் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற அனுமதிக்குமாறு முறையிட்டார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள் சிபிஐக்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்பதால் ஏன் அனுமதி கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கான காரணம் புரியவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். வழக்கை சிபிஐக்கு மாற்ற முடிவு செய்தால் நீதிமன்றம் அதில் குறுக்கீடு செய்யாது என்று கூறினர். அத்துடன் கோவில்பட்டி நடுவர் விசாரணைக்கு சாத்தான்குளம் காவல் துறையில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறிய நீதிபதிகள் இது நீதிமன்ற கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தனர்.
விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்க மறுப்பது ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை அனைத்தும் கைப்பற்ற வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் அனைத்தையும் பெற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டு இருக்கின்றனர்.
வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால் உடற்கூறு ஆய்வு அறிக்கையை அவர்களிடம் ஒப்படைத்துவிடுவதோடு கோவில்பட்டி தூத்துக்குடி நீதிபதிகளின் விசாரணை அறிக்கையையும் அளிக்கலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.






