திமுகவில் 4-வதாக செஞ்சி எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு… ராஜபாளையம் திமுக எம்எல்ஏவின் மனைவி மகன்களுக்கும் தொற்று உறுதி!!
கொரோனா தொற்றால் மேலும் ஒரு திமுக எம்எல்ஏ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.செஞ்சி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4 திமுக எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அனைத்து பகுதிகளுக்கும் பரவத் தொடங்கி விட்டது. அரசுத் தரப்பில் சமூகப் பரவல் இல்லை என்று தொடர்ந்து கூறப்பட்டாலும், தற்போது பிறந்து 7 நாள் ஆன பச்சிளம் குழந்தை முதல் அனைத்து வயதினருக்கும், அரசியல்வாதிகள், வியாபாரிகள் என பல தரப்பட்டவர்களுக்கும் பரவி வருவது பெரும் அச்சத்தில் உறையச் செய்து வருகிறது.
இதில் மக்கள் பணியாற்றும் எம்எல்ஏக்களும் தப்பவில்லை. கொரோணா பாதிப்பால் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ரிஷிவந்தயம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் எம்எல்ஏ அரசு ஆகியோருக்கும் தொற்று உறுதியானது.
இந்நிலையில் 4-வது திமுக எம்எல்ஏவாக செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தானுக்கும் நேற்று தொற்று உறுதியாகி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுகவில் 4 எம்எல்ஏக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கும் கொரோணா பாதிப்பு உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனின் மனைவி, இரு மகன்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் ஆரம்பித்த நாளிலிருந்து, இன்று வரையிலும் மக்களோடு தொடர்பில் இருப்பவர் தங்கப்பாண்டியன் எம்எல்ஏ ஆவார்.
தொகுதியில் நிவாரண உதவிகளையும் தொடர்ந்து அளித்து வந்தவர். 15 நாட்களுக்கு முன், தங்கப்பாண்டியனின் மகளுக்கு, விருதுநகர் திமுக மாவட்ட செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில், ராஜபாளையத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், தங்கப்பாண்டியனின் மனைவி மற்றும் இரு மகன்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தங்கப்பாண்டியனின் ரத்த மாதிரியையும் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவருக்கு தொற்று பாதிப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.






