எல்லையில் இந்தியாவுக்கு எதிராக படைகளை குவித்து வரும் சீனா!
கல்வான் பகுதியில் படைகளை விலக்கிக் கொண்டுள்ள அதே வேளையில் பேப்சன் சமவெளிப் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தனது படைகளை குவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகள் இராணுவ நிலைகளை அமைத்திருந்த நிலையில் இந்தியா – சீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 15ம் தேதி நடைபெற்ற இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன நிலைகளும் தகர்க்கப்பட்டன. இந்த நிலையில் ராணுவ அதிகாரிகள் அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் எல்லையில் இருந்து ராணுவத்தை விலகிக் கொள்வது என உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் அசல் கட்டுப்பாட்டு கோட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வேட்சன் சமவெளிப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் இருந்து வருவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பேப்சன் பகுதியில் இரு நாடுகளும் படைகளை அதிகரித்துள்ளன. குறிப்பாக சீன ராணுவம் தனது டேங்குகளை வழக்கமான பகுதிகளை விட்டு சற்று முன்னோக்கி நகர்த்தி உள்ளது.
மேலும் தனது இராணுவ நிலைகளையும் சீனா அதிகரித்துள்ளது. இதை அமெரிக்க செயற்கைக் கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன. ஜூன் 15 ஆம் தேதி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சீனா அதன் நிலைகளை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. ஒய் ஜங்ஷன் அல்லது பாட்டில் நெக் எனப்படும் குறுகலான இடத்தில் சீன ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் மட்டுமின்றி கனரக ஆயுதங்கள் மற்றும் சிறப்பு ராணுவ தளவாடங்களையும் சீனா குவித்துள்ளது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் எல்லையில் சில இடங்களில் ஊடுருவியுள்ள சீனாவின் செயல் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






