சமயபுரம் இரட்டைச் சிறார்கள் கொலை வழக்கு!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே தீபாவளி அன்று நிகழ்ந்த இரட்டைச் சிறார்கள் கொலை வழக்கில் அதிரடித் திருப்பமாக, ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்டெடுக்கச் சென்றபோது, போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்ற முக்கியக் குற்றவாளி மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி, தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததில் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்களது நண்பர் விக்னேஷைப் பார்ப்பதற்காக, வீர ராகுல் மற்றும் விஷால் ஆகிய இருவரும் தங்களது மற்றொரு நண்பர்களுடன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து திரும்பும் வழியில், அவர்களுக்குள் ஏற்பட்ட திடீர் தகராறில் அந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ராகுல் மற்றும் விஷாலை கடுமையாகத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த இரு சிறார்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து உயிரிழந்த ராகுலின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள், தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போலீசார் துரிதமாகச் செயல்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் தொடர்புடைய கெனிவின்ஸ், கரனிஷன், சரவணன், சிவநேசன், கிருபாகரன் மற்றும் ஹரிஹரன் ஆகிய ஆறு பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.காவல்துறை விசாரணையின்படி, உயிரிழந்த ராகுலுக்கும், குற்றவாளி ஒருவருக்கும் இடையே ஒரு சிறுமியுடனான பழக்கம் காரணமாக ஏற்பட்ட தனிப்பட்ட முன்விரோதம் இந்தக் கொலைக்குக் முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சிவநேசனை போலீசார் இன்று (நவம்பர் 11) குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது, காவல்துறை பாதுகாப்பில் இருந்த சிவநேசன் திடீரென போலீசாரை நோக்கி கற்களை வீசித் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டும் அவர்களைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட தொடர் எச்சரிக்கைகளையும் மீறி அவர் தாக்குதலைத் தொடர்ந்ததால், தற்காப்பு மற்றும் பாதுகாப்புக் கருதி காவல் ஆய்வாளர் குணசேகரன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குற்றவாளி சிவநேசனின் இடது முழங்காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மோகன் என்ற காவலரும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த குற்றவாளி சிவநேசனும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் குறித்தும் அனைத்துச் சட்டப்பூர்வ நடைமுறைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டு வருவதாகத் திருச்சி மாவட்டக் காவல்துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மேலும், இப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





