கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு
நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகலையும் அவசர சட்டம் ஒன்றின் மூலம் ரிசர்வ் வங்கியில் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விவரித்தனர்.
முதலில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நாடெங்கும் உள்ள ஆயிரத்து 540 கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடு களை ரிசர்வ் வங்கி நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 8 கோடியே 60 லட்சம் டெபாசிட் தாரர்களின் 4 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த முடிவுப்படி நாடெங்கும் உள்ள ஆயிரத்து 482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், பல்வேறு மாநிலங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும் 58 கூட்டுறவு வங்கிகளும், ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் எனவும் இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
விண்வெளித் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ஜவடேகர் தெரிவித்தார். பிரதமரின் முத்ரா சிறுதொழில் கடன் திட்டத்தில் சிசு பிரிவில் கடன் பெறுவோருக்கு இரண்டு விழுக்காடு வட்டி மானியம் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரிலுள்ள உட்பிரிவுகளை வகைப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் குழுவின் பதவிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கவும் ஒப்புதல் பெறப்பட்டு இருப்பதாக அமைச்சர் கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொரொனா கால சூழலை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதுவரை 488 மக்களவை பகுதிகளில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங் கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் கீழ் தகுதி உள்ள பயனாளிகளுக்கும் 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.






