நெல்லை ‘இருட்டுக் கடை அல்வா’ உரிமையாளர் தற்கொலை.. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சலில் விபரீத முடிவு!!
நெல்லையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழ் பெற்ற இருட்டுக் கடை அல்வா கடை உரிமையாளர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.
அல்வா என்றாலே அனைவரின் ஞாபகத்துக்கு வருவது திருநெல்வேலி தான் . கூடவே இருட்டுக் கடை அல்வா என்ற உச்சரிப்பும் எழும். அந்த அளவுக்கு திருநெல்வேலிக்கு புகழ் சேர்த்தது நெல்லையப்பர் கோவில் எதிரில் உள்ள இருட்டுக்கடை அல்வா கடைதான்.
சுமார் 90 வருடங்களுக்கு முன்னர் ராஜஸ்தானில் இருந்து நெல்லையில் அல்வா கடை போட்ட பிஜிலி சிங் என்ற மார்வாடியின் குடும்பத்தாரின் கைப்பக்குவமும் தாமிரபரணியின் சுவை நீரும் சேர்ந்து வாயில் போட்டால் தொண்டைக்குள் வழுக்கிச் சென்று நாக்கை சுழட்டச் செய்து விடும். மாலை வேளையில் திறக்கப்பட்டு அரிக்கேன் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் இந்த அல்வாக் கடை செயல்பட்டதால் இருட்டுக் கடை என்ற பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டு புகழ் பரப்பியது.
90 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அந்தி சாயும் மாலை வேளையில் தான் கடை திறக்கப்பட்டு சுடச் சுட அல்வா கிடைக்கும். இதை வாங்க நீண்ட வரிசையும் க்யூவில் நிற்கும். இருட்டுக் கடை என்ற பழமை மாறாமல் இருக்க இன்றும் ஒரே ஒரு குண்டு பல்பின் மங்கலான வெளிச்சத்தில் பரபரப்பாக கடை செயல்பட்டு வருகிறது. தற்போது பிஜிலிசிங்கின் வாரிசான ஹரிசிங் (வயது 75) இந்தக் கடையை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தான் உலகை கடும் பீதியிலும், அச்சத்திலும் உறையச் செய்து லட்சக்கணக்கில் மனித உயிர்களை காவு வாங்கி வரும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஹரிசிங்குக்கும், அவருடைய மருமகனுக்கும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
75 வயதான ஹரிசிங், தமக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில், இன்று மருத்துவமனை வளாகத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல், நெல்லை வாசிகளுக்கு மட்டுமின்றி பலருக்கும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே நெல்லை இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் மற்றும் அவரது மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இருட்டுக் கடைக்கும், அல்வா தயாரிக்கும் குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டதுடன் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
மேலும் இருட்டுக் கடை அல்வா கடை பணியாளர்கள் மற்றும் கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் சுகாதாரத் துறையினர் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






