வனத்துறையினரின் அலட்சியத்தால் கோவை ஆனைகட்டி பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி வந்த ஆண் யானை உயிரிழப்பு !!!
கோவை ஆனைகட்டியை ஒட்டியுள்ள ஜம்பு கண்டி வனப்பகுதியில் சுமார் 12 வயதுள்ள ஆண் காட்டு யானை வாயில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது.இது குறித்து அப்பகுதி பொது மக்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானைக்கு வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பழங்களுடன் மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில் வனத்துறையினரின் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தது.
சமீப காலமாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.வனத்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபடுவதில்லையா ? அல்லது வனத்துறை மருத்துவருக்கு உரிய சிகிச்சையளிக்க தெரியவில்லையா ? என வன ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
மேலும்,உரிய நேரத்தில் காயத்துடன் சுற்றித்திரிந்த யானையை கண்டறிந்து சிகிச்சையளித்து இருந்தால் காப்பாற்றியிருக்கலாம்.அதனை விடுத்து கடைசி நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சையளித்து சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்திருப்பது வன ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் அதுவும் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த சில மாதங்களில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்திருப்பது வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






