காளையார்கோவில் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்!
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள நல்லேந்தல் கிராம கண்மாய்க்கு செல்லும் நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து மணல் குவாரி அமைக்கபட்டதை கண்டித்து, கிராம மக்கள் பொக்லைன் இந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காளையார்கோவில் அருகே நல்லேந்தல் என்ற விவசாய கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்திற்கு நீர் ஆதாராமாக நல்லேந்தல் பெரிய கண்மாய் விளங்கி வருகிறது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கண்மாய்க்கு சுற்று வாட்டார பகுதியில் இருந்து நீர்வழிப்பாதைகள் வழியாக நீர் வந்து சேரும். இக்கண்மாய் மூலம் சுமார் 250 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கண்மாய்க்கு வரும் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து கிராவல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறி பொக்லைன் இயந்திரங்கள் வந்தன.
நீர் வழிப்பாதையில் மணல் குவாரி அமைத்தால் நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும் என கூறி நல்லேந்தல் கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாய நிலத்தை பாதிக்கும் வகையில் கிராவல் குவாரி அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், கண்டித்து கிராம மக்கள் கோஷமிட்டனர்.
இதனால் கிராவல் குவாரி அமைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் 20 க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கிவுள்ள நிலையில், ஆங்காங்கே மக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






