லடாக் எல்லையில் மோதல் நடைபெற்ற போது சீனாவால் சிறை பிடிக்கப்பட்ட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிப்பு!
லடாக் எல்லையில் மோதல் நடைபெற்ற போது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட 10 இந்திய ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 76 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த சண்டையின்போது 10 இந்திய ராணுவ வீரர்களை சிறைபிடித்து சீன ராணுவம் அவர்களின் முகாமில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நாட்டு ராணுவத்தில் மேஜர் ஜெனரல்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்களையும் உடனே விடுவிக்க வேண்டும்.
இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும் என இந்திய மேஜர் ஜெனரல் எச்சரிக்கை விடுத்ததாகவும் அதைத்தொடர்ந்து10 இந்திய ராணுவ வீரர்களையும் சீனா திருப்பி அனுப்பியதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோதலின்போது ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என முன்னதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்ட நிலையில் 10 இந்திய வீரர்களை சீனா விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோதலின் போது காயமடைந்த 76 ராணுவ வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை என்றும், 18 ராணுவ வீரர்கள் 15 நாட்கள் பணியில் சேர்ந்து விடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் மூன்று வாரங்களில் மீண்டும் பணிக்கு செல்வார்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






