கொரொனா பாதுகாப்பு பணியில் அதிக காவல் துறையினரை ஈடுபடுத்த வழக்கு!
டாஸ்மாக் கடைகளுக்கு மாறாக கொரோனா தடுப்பு பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுபடுத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் மக்களை கட்டுப்படுத்தும்பணியில் குறைந்தளவே உள்ளனர். இதனால் கொரொனா தொற்று அதிகமாக பரவி வருவதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கொரொனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிகளில் அதிக காவல்துறையினரை ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தொடர்பாக இரண்டு வாரத்தில் தமிழக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள் காவல்துறை தலைமை இயக்குனர் டாஸ்மாக் நிர்வாகம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






