கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சங்கள் மோசடி.அரசு ஊழியர்கள் இருவர் கைது !!!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நிலை உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த துடியலூர் வடமதுரை பகுதியை சேர்ந்த பிரபு, மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் ராமநாதபுரம் SNV கார்டன் பகுதியை சேர்ந்த சுரேஷ் பாபு ஆகிய இருவர் மீது அரசு வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி பல லட்சங்கள் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.இதனடிப்படையில் கோவை சிட்டி கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டது.

விசாரணையில் இவர்கள் இருவரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் சுகாதாரம்,கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்கள் மோசடி செய்ததும்,போலி அரசாணைகளை தயார் செய்து கொடுத்துள்ளதும் அம்பலமானது.இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே அரசுப்பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் துறையினர் கூறும் பொழுது பொதுமக்கள் பணம் கொடுத்து, குறுக்கு வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் மோசடி பேர்வழிகளிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் எனவும்,அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.அரசின் அறிவிப்பு, எழுத்து தேர்வு,நேர்முகதேர்வு, தகுதிதேர்வு போன்றவைகள் இல்லாமல் அரசு வேலையில் யாரும் சேரமுடியாது.எனவே, பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.






