தமிழகத்தில் கொரோனா தொற்றும் உயிரிழப்பும் அதிகரிக்கிறதா ?
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 40 வயதிற்கு உட்பட்ட மூன்று பேர் உயிரிழந்து இருப்பதால் நோய்த் தொற்றுக்கு இளம் வயது உள்ளவர்கள் உயிரிழப்பது அதிகரிக்கிறதா என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரொனா முதியவர்கள், குழந்தைகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என பெரும்பாலோனோர் நம்பி வந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி நேரிட்டது 17 வயது சிறுமியின் மரணம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே நாளில் உயிரிழந்தார்.
இந்த செய்தி தமிழகத்தில் அச்சத்தை அதிகப்படுத்தியது. கொரொனா இளம் வயதினரையும் விட்டு வைக்காதா என்ற கேள்வி எழுப்பும் வகையில் 40 வயதிற்குட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 39 வயது ஆண் உயிரிழந்துள்ளார். நான்காம் தேதி அனுமதிக்கப்பட்ட 30 வயது ஆண் ஒருவரும், அடுத்த பத்து நிமிடங்களில் உயிரிழந்திருக்கிறார்.
ஐந்தாம் தேதி வெளியான பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 30ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட43 வயதான ஆண் அடுத்த நான்கு நாட்களில் உயிரிழந்தார்.
உயிரிழந்த 3 பேருக்கும் கொரொனா இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. மூவரும் நீரிழிவு அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அல்ல என்றும் தெரியவந்துள்ளது.






