புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்ன?
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் கடந்த வாரம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.
இந்த வழக்கில் ஆஜரான சொலுசிட்டி ஜெனரல் துஷார் மேத்தா புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஜூன் மூன்றாம் தேதி வரை 4 ஆயிரத்து 228 ரயில்கள் இயக்கப்பட்டு 50 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறினார். நாற்பத்தி ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலை மார்க்கமாக சென்றதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கும் 15 நாட்கள் அவகாசம் அளிப்பதாக கூறிய உச்சநீதிமன்றம் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எது மாதிரியான வேலை வாய்ப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கப்படும் என்பது குறித்து எழுத்துபூர்வமாக மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் மாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த தகவல்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் எஞ்சியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயின் முத்து கோரிக்கை விடுத்ததை அடுத்து 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
வரும் செவ்வாய்க்கிழமை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.






