--- --:--:-- --

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை!

7

தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி, அரசூர், பிடாகம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் வெப்பம் தனிந்தது.

 

இருப்பினும் மழையால் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அவதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில் மாலையில் பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. சேலத்தில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது.

 

இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள கம்பம் சரிந்ததால் போக்குவரத்து தடைபட்டது. கடலூரில் பகலில் 100 டிகிரிக்கும் மேலாக வெப்பம் தாக்கிய நிலையில் மாலையில் மழை பெய்தது. புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

மரக்காணம், திண்டிவனம், கொடைக்கானல் உள்ளிட்ட மேலும் பல ஊர்களிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் வருகிற எட்டாம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon