2025ம் ஆண்டிற்குள் காச நோயை முழுமையாக ஒழிக்க இலக்கு!
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூருவில் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 25 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் காணொலி காட்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நமது மருத்துவ பணியாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ராணுவ வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக தான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இருப்பதாக பெருமிதம் தெரிவித்த அவர் மருத்துவப் பணியாளர் களுக்கு எதிரான வன்முறையை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய பொது சுகாதார திட்டமாக இருப்பதாகவும் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடி பேர் இதனால் பயன் பெற்றிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்வி அமைப்பை நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறிய பிரதமர் 2025ம் ஆண்டிற்குள் காச நோயை முழுமையாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.






