மனைவியின் தாலியை அடகு வைத்து வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி! ஊரடங்கால் வறுமைக்கு தள்ளப்படும் நிலை!
சென்னையில் மனைவியின் தாலியை அடகு வைத்து விட்டு வாடகை கொடுத்த மாற்றுத்திறனாளி, குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்க தெரியாமல் பரிதவித்து வருகிறார். சென்னை கொளத்தூரை சேர்ந்த சுரேஷ் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
காதல் மணம் புரிந்த கையோடு மனைவி கூலி வேலை செய்து கொடுத்த பணத்தில் படித்து பட்டம் பெற்றார். பேராசிரியராக பணிபுரிந்து குடும்ப வறுமையை விரட்ட எண்ணி சென்னைக்கு வந்த இவருக்கு ஏமாற்றமே மிச்சம். மாடிப்படிகளில் ஏறிச் சென்று வகுப்பு எடுக்க முடியாது என நிராகரிக்கப்பட்ட சுரேஷ் இறுதியில் பொன்னேரியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்தார்.
அங்கு படிக்கட்டில் தடுமாறி விழுந்ததில் தடம் மாறியது இவரது வாழ்க்கை. மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் பெற்று இருந்தாலும் தொடர்ந்து அதற்கான பயிற்சியை பெற கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் திருமண மண்டபங்களில் மூலம் ஆர்டர் பெற்று முகூர்த்த பானை செய்யும் தொழிலில் இறங்கிய சுரேஷின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது இவரை மேலும் வறுமையில் தள்ளியுள்ளது.
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டம் மட்டுமே அவருடன் போட்டி போட்டுக்கொண்டு உள்ளது.






