ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி உள்ளே நுழைந்த நபர் 13 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்துள்ள சம்பவம்!
சென்னை மதுரவாயலில் ஏடிஎம் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பதாக கூறி மர்ம நபர் ஒருவர் 13 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் எம்எம்டிஏ காலனி பகுதியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்திற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய நபர் ஒருவர் கிருமி நாசினி தெளிக்க உள்ளதாக அங்குள்ள காவலாளியிடம் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய காவலாளியும் எந்த கேள்வியும் கேட்காமல் அவரை உள்ளே அனுமதித்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று அந்த நபர் சாவின் மூலம் ஏடிஎம் எந்திரத்தை திறந்து பணத்தை எடுத்துள்ளார். இதைக்கண்ட அங்கு நின்றிருந்த பணம் எடுக்க வந்த நபரும் வங்கி ஊழியர் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
பணம் முழுவதையும் எடுத்துக் கொண்டு அவர் அங்கிருந்து வெளியே கிளம்பி விடவே சந்தேகம் அடைந்த அந்த நபர் காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போதுதான் பணம் திருடு போனதை சுதாரித்துக்கொண்ட காவலாளி உடனடியாக வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு நடந்ததை விவரித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். 13 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது. கிருமி நாசினித் தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






