புல்வாமா பகுதியில் இந்திய வீரர்களால் கார் வெடித்து சிதறிய சம்பவம்! தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு!
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்த இருந்த பயங்கர தாக்குதல் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற சான்ட்ரோ கார் ஒன்று காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஏதேனும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளதா என்று மக்கள் அச்சம் அடைந்தனர்.
ஆனால் அது பாதுகாப்பு படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் நடத்திய குண்டு வெடிப்பு என தெரியவந்தது. முதல்நாள் இரவு அந்த கார் சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினரை தாண்டி தப்பிக்க முயற்சி செய்தது. பாதுகாப்பு படை வீரர்கள் துரத்தவும் இனி தப்பிக்க வழியில்லை என்று தெரிந்த ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு தப்பி விட்டார்.
அந்த வாகனத்தை சோதனையிட்ட போது 40 கிலோ வெடிமருந்து இருந்தது கண்டறியப்பட்டது. ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இந்த தாக்குதலை தடுக்க ராணுவ வீரர்களுடன் கூட்டாக செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்தால் வெடிகுண்டுகள் அங்கேயே வெடித்து விட வாய்ப்புள்ளது என்று வெடிகுண்டு நிபுணர்கள் எச்சரித்தனர்.

ஆகவே உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்பிய பின்னர் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். விடியும் வரை காத்திருந்து வாகனத்தில் இருந்த வெடி மருந்தை நிபுணர்களின் உதவியுடன் பாதுகாப்பு படையினர் வெடிக்க செய்தனர்.
சமீப நாட்களாக பயங்கரவாதிகளை வேட்டையாட இந்திய ராணுவம் முயற்சி செய்து வருவதன் காரணமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் இத்தகைய முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் உளவுத் துறை கருதுகிறது. ஆகவே காஷ்மீர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களிலும் அண்டை மாநிலமான பஞ்சாப் எல்லை பகுதிகளிலும் கூடுதல் கண்காணிப்பு தேவை என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ராணுவ மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள் கூடுதல் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று ராணுவ அதிகாரிகள் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.






