இரண்டு மனைவிகளை கொடூரமாக கொலை செய்த கணவன்!
தன்னுடைய இரண்டு மனைவிகளையும் அடுத்தடுத்து கொலை செய்த லாரி ஓட்டுநரை சென்னை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முதல் மனைவியின் காதலையும் அவரது மரணத்தையும் மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு நாடகமாடிய அவர் சிக்கியது எப்படி? தன்னுடைய இரு மனைவிகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட கணவனின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கட்டிய மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் 35 வயதான லாரி ஓட்டுனர் கோபாலகிருஷ்ணன். 24 வயதான கோகிலா என்பவருடன் 2016 ஆம் ஆண்டு கோபால கிருஷ்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு மூன்று வயதில் மகன் உள்ளார். கோகிலா உடன் தாய் உமாவும் தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது குடிபோதையில் இருந்த கோபாலகிருஷ்ணன் கோகிலாவிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார். அதனால் வீட்டின் வெளியில் வராண்டாவில் படுத்து இருந்துள்ளார். சிறிது நேரத்தில் கோபாலகிருஷ்ணன் வெளியில் செல்ல வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கோகிலா தூக்கில் தொங்கினார். அதிர்ச்சி அடைந்த தாய் உமா சத்தம் போட்டு உடலை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் கோகிலாவின் தாய் அளித்த புகாரையடுத்து கோபாலகிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவருக்கு ஏற்கனவே செங்குன்றத்தை சேர்ந்த 21 வயதான ராஜேஸ்வரியை காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்தது அம்பலமானது. தன்னுடைய முதல் மனைவி ராஜேஸ்வரியை கொன்றுவிட்டு 2009 ஆம் ஆண்டு சிலிண்டர் வெடித்து இறந்ததாக நாடகம் ஆடியுள்ளார். கோபாலகிருஷ்ணன், ராஜேஸ்வரியின் பெற்றோர் செங்குன்றம் போலீசாரிடம் கொடுத்த புகாரை விசாரித்த போது வசமாக சிக்கிக்கொண்டார் கோபாலகிருஷ்ணன்.
அந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கோபாலகிருஷ்ணன் உண்மையை மறைத்து கோகிலாவை காதலித்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். அதிக அளவு மது குடித்து விட்டால் கொடூரமாக கோபாலகிருஷ்ணன் நடந்துகொண்டது கொலைகளுக்கும் காரணம் என்கிறார்கள் போலீஸார். அம்பத்தூர் ஆர்டிஓ விசாரணை அடிப்படையில் வாக்குமூலத்தின் அடிப்படையில் கோபால கிருஷ்ணனை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லாரி ஓட்டுநர் அடுத்தடுத்து 2 பெண்களை திருமணம் செய்த அவர்கள் இருவரும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






