--- --:--:-- --

அதிரடி திட்டங்களோடு களமிறங்கும் அதிமுக: தேர்தல் பணிகளில் புது வியூகம்… சீனியர்களுக்கு அடிக்கப்போகுது யோகம்!

ewqr

அதிமுகவில் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்ட நடவடிக்கை, கொரொனாவால் ’டல்’ அடித்திருந்த தமிழக அரசியல் களத்தை சுறுசுறுப்படையச் செய்துள்ளது. ஏப்ரல்- மே மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை தள்ளிப்போட பாஜக முயல்வதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், அதிமுகவோ இப்போதிருந்தே தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து, தயாராகி வருகிறது.

 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், அதாவது 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, தமிழகத்தின் 13வது முதல்வராக, எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். அவரது அரசின் பதவிக்காலம் அடுத்தாண்டு மே மாதம் நிறைவு பெறுகிறது. சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, திமுக ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்த கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்துத்தர, வட இந்தியரான பிரசாந்த் கிஷோர் பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

 

அதிமுகவும் தனது பணிகளை தொடங்க திட்டமிட்டிருந்த போது தான், கொரொனா குறுக்கிட்டது. நாட்டையே முடக்கிப் போட்ட கொரொனாவுற்கு தமிழகமும் தப்பவில்லை. எல்லோரும் வீட்டில் முடங்கி இருந்தாலும் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கொரொனா தடுப்புப் பணிகள், நிவாரண உதவிகள் வழங்குவது என்று பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர்.

அரசுப்பணிகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தலுக்கு அதிமுகவை ஆயத்தப்படுத்தும் வேலைகளும் மறுபுறம் சத்தம் போடாமல் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாவே, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு – ஐடி விங்கை முழுமையாக மாற்றி மண்டல அளவிலான நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள். அத்துடன் நிற்காமல், சுமார் 12000 பேர் வரை இருந்த, அதிமுகவின் ஊராட்சி செயலாளர் பதவிகளை , ஒரே நாளில் ரத்து செய்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும், கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளனர்.

 

இது, தமிழக கட்சிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது; அதிமுகவினருக்கே இது அதிர்ச்சியாக இருந்தது. இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, “திராவிட கட்சிகளில் கிளைக் கழகச் செயலாளர்கள் பதவி என்பது கட்சியின் அடிமட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் முக்கியப் பதவி. அதற்கு தனி மதிப்பு மரியாதை உண்டு. அதிமுகவில் கிளைக் கழகச் செயலாளர்களுக்கும், ஒன்றியக் கழகச் செயலாளர்களுக்கும் இடையில், இந்த ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் என்ற பதவி ஜெயலலிதா காலத்தில் தான் உருவாக்கப்பட்டது.

 

அதன்படி அனைத்து ஊராட்சிகளுக்கும் செயலாளர் பதவிகளுக்கு கட்சியினர் நியமிக்கப்பட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி பிளவுபட்டது. டிடிவி தினகரன் கட்சியை தொடங்கியதும், ஊராட்சி செயலாளர்களில் பலர், அமமுகவுக்கு தாவினர். இதனால், அந்த பதவிகள் பல வெறுமனே இருந்தது. இனி அப்பதவி தேவையில்லை என்று ஒன்று என்று முதல்வரும், துணை முதல்வரும் நினைத்திருக்கலாம்” என்று கூறினர்.

அதே நேரம், பதவி இழந்த அதிமுகவினர் வேறு கட்சிக்கு தாவிவிடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியினரின் கடந்த கால வரலாறு, செயல்பாடு, பங்களிப்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்ப, புதிய பதவி வெயிட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அதிமுகவில் ஊராட்சிக் கழகச் செயலாளர் பதவிகளை கலைத்திருப்பதும், கட்சியின் தொழில் நுட்பப் பிரிவு திருத்தி அமைக்கப்பட்டிருப்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்தாண்டில் அதிமுக தனது அரசு அதிகாரத்தை துறக்க வேண்டிய தருணத்தில் கட்சியினரை தங்களது கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியமானது; ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானதும் கூட.

 

எனவே, பதவி இழந்தவர்களை திருப்திபடுத்தும் வகையில், விரைவில் வாரியத் தலைவர்கள் நியமனம் உள்ளிட்ட அறிவிப்புகள் இருக்கும் என்று, அதிமுக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. அதாவது, இனி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்ற நிலையில், மாவட்டங்களில் செல்வாக்கு படைத்த, பதவி ஏதுவுமில்லாத அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பதவிகள் தரப்படலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு, முக்கிய புள்ளிகளை பதவி தந்து திருப்தி படுத்துவதன் மூலம், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் கட்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்; தேர்தல் நேரத்திற்கும் பலன் தரும் என்று ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். நினைக்கின்றனறாம்.

 

அதன் முன்னோட்டமாகவே தற்போதைய இந்த அதிரடி ஆக்ஸன்கள்; விரைவில், அதிமுக தலைமைக்கழகத்தில் இருந்து இன்னும் சில முக்கிய அறிவிப்புகள் வரலாம். இதெல்லாம், சட்டசபை தேர்தலுக்கு புது ரத்தம் பாய்ச்சி ரத்தத்தின் ரத்தங்களை அதிமுக தயார்ப்படுத்தி வருவதையே காட்டுகிறது. கொரொனாவின் தாக்கம் சற்று தணிந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் களமும் சுறுசுறுப்படைந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon