அரசு உத்தரவை மீறி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைப்பு!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அரசு உத்தரவை மீறி மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. ஊரடங்கு அமலில் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அடுத்த மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் இயங்கிவரும் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தது.
அதன்பேரில் சார் ஆட்சியர் பிரதாப் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் மாணவ, மாணவிகளை கட்டாயபடுத்தி வரவழைத்து விடுதியில் தங்க வைத்து சிறப்பு வகுப்பு எடுக்கப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பள்ளிக்கு சீல் வைக்கும்படி சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பெற்றோர்களை வரவழைத்து அவர்களை மாணவ, மாணவிகளை அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.






