கர்நாடகாவில் பொதுப்போக்குவரத்து மீண்டும் தொடக்கம்…!
நாடு முழுவதும் நான்காம் கட்ட பொது முடக்கம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இதைப்போல அண்டை மாநிலமான கர்நாடகாவில் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. மீண்டும் பொது போக்குவரத்து தொடங்கியதால் டெல்லியில் முக்கிய வீதிகளில் நீண்ட நாட்களுக்குப்பின் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
டெல்லியில் ஆட்டோ, டாக்சி மற்றும் பேருந்து சேவைகள் என்று அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆட்டோவில் ஒரு பயணியையும், வாடகை கார்களில் இரண்டு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பேருந்துகளில் 20 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கர்நாடகாவிலும் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கியது. மாவட்டத்திற்குள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அனைத்து பயணிகளும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர். சுமார் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியதால் பணிக்கு செல்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றி கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.






