தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓரினச் சேர்க்கையாளர்கள்! நடந்தது என்ன?

நாமக்கல் மாவட்டத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களாக இருந்த இரு பெண்களில் ஒருவருக்கு நாளை நிச்சயதார்த்தம் நடக்கவிருந்த நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பழகிய இந்த இளம் பெண்கள் தன்பால் ஈர்ப்பாளர்களாக மாறியுள்ளனர்.

 

அதற்கு தடை வந்தபோது தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டு உள்ளனர். இளம் பெண்களின் வாழ்வில் நடந்தது என்ன? திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை எளையம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நந்தகுமார், ஜோதி தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

 

பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்த ஜோதி பெரியமணலி பகுதியில் உள்ள தறி பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நந்தகுமார் கல் குவாரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே தறி பட்டறையில் பெரியமணலி கோட்ட பாளையத்தை சேர்ந்த 20 வயதான பிரியா என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார்.

 

31 வயதான ஜோதிக்கும், பிரியாவுக்கும் இடையே முதலில் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது தன்பாலின ஈர்ப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் தறி பட்டறையில் இருவரும் தனிமையில் இருக்கவே தகவலறிந்த உரிமையாளர் இருவரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். இருவரது குடும்பத்தினரும் அவர்களை கண்டித்துள்ளனர்.

சந்திக்கவும் தடை விதித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் ஜோதி வீட்டில் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சந்திக்க முடியாத நாட்களில் வாட்ஸ்அப் மூலமும், வீடியோ கால் மூலமும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

 

இதனிடையே பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்த குடும்பத்தினர் வரும் 27ஆம் தேதி திருமணத்திற்கு நாள் குறித்து திங்கள்கிழமை அன்று நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். திருமணமானால் பிரிய நேரிடும் என்பதால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து சனிக்கிழமை காலை 10 மணிக்கு பிரியா தனது சைக்கிளில் ஜோதி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்த ஜோதியின் தம்பியை வெளியே அனுப்பிவிட்டு இருவரும் கதவை அடைத்து உள்ளே தனிமையில் இருந்துள்ளனர். பிரியாவை வீட்டில் காணாமல் அவரது சகோதரர் ஜோதி வீட்டிற்கு சென்ற போது கதவு அடைக்கப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து பார்த்தபோது ஜோதியும், பிரியாவும் அறையில் ஒரே சேலையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

 

எலச்சிபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்பால் ஈர்ப்பு என்பது இன்றுவரை மருத்துவ உலகில் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. குடும்ப அமைப்பில் இருப்பவர்கள் இது போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் அவற்றில் இருந்து வெளியேற வழிகள் உள்ளது. குடும்பத்தினரும் இதுபோன்ற பிரச்சனைகளை புரிந்து கொண்டு தன் இருப்பில் சிக்கியவர்களை மீட்டு எடுக்க முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.


Leave a Reply