விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி!
இந்திய விண்வெளித்துறையான இஸ்ரோவில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். புதுடெல்லியில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
குறிப்பாக செயற்கை கோள் தயாரிப்பு, செயற்கைக்கோள் ஏவுதல் உள்ளிட்டவற்றை தனியார் முதலீட்டை ஊக்குவிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதில் கதிரியக்க தனிமங்கள் முக்கிய பங்காற்றுவதாக குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் மருத்துவத் துறையில் பயன்படும் கதிரியக்க தனிமங்கள் தயாரிப்பதில் தனியார் பங்களிப்பிற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.
ஒவ்வொரு அமைச்சர்களும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும் என அறிவித்த அவர் முதலீடுகளை ஈர்ப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும் என்றார். ஒட்டு மொத்தமாக எட்டு முக்கியத் துறைகளிலும் கொள்கை மாற்றங்கள் உருவாக்கப்படும் என்று சீதாராமன் தெரிவித்தார்.






