பெண்ணின் உடலை பிளேடால் கிழித்த கணவரின் உறவினர்கள்! காரணம் கள்ளக்காதல்!
மேட்டூர் அருகே பாலைமலைகெம்மம் பட்டியை சேர்ந்த சின்னகுள்ளன் என்பவரது மனைவி கலா. இவர்களுக்கு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், கலாவுக்கு சின்னசாமி என்பவருடன் முறையற்ற காதல் ஏற்பட்டுள்ளது. இதை கணவரும், கணவரின் உறவினர்களும் பலமுறை கண்டித்துள்ளனர்.
அண்மையில் கலாவை அழைத்து ஊர் பஞ்சாயத்தில் வைத்து காதலன் சின்னசாமியை சந்திக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஆனால் கட்டுப்படாத கலா சம்பவத்தன்று காட்டிற்கு விறகு எடுத்து வர செல்வதாக கூறிவிட்டு சின்னசாமியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதை பார்த்த கணவர் சின்ன குள்ளனின் உறவினர்கள் கலாவை காட்டுப் பகுதியில் வைத்து ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி அதோடு உடலின் பல இடங்களில் பிளேடால் கிழித்ததோடு, இடது கையையும், காலையும் முறித்து தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர். மறுநாள் காலை அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு கை மற்றும் கால்களில் மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கலாவை கொலை செய்ய முயன்றதாக கணவன் சின்ன குள்ளனின் உறவினர்களான செல்லப்பன்,
குமார், ரவி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கணவரும், வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில் காதலனுடன் சுற்றி வந்த கலாவுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தாக்கியதாகவும் ஒருகட்டத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து தூக்கி வீசிவிட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கலா மீதான இந்தத் தாக்குதல் குறித்து கணவரிடம் விசாரணை நடத்த வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு அவர் சாராயம் காய்ச்சுவதை அறிந்து அவரையும் கைது செய்தனர். கணவனோ, மனைவியோ கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சுமுகமாக பிரிந்து செல்வதை விட்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டினாலும் தவறான உடல் சார்ந்த தேடல் எப்போதும் உயிருக்கு ஆபத்து என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த கொடூர தாக்குதல் சம்பவம்.






