--- --:--:-- --

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் காவலர் உள்பட 3 பேருக்கு கொரோனா…! பீதியில் மற்ற காவலர்கள்

RRR

ராமநாதபுரத்தில் காவலர், தீயணைப்பு வீரர் மற்றும் சுகாதார பணியாளர் என ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தமிழகம் முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனாலும் கொரோனாவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2323 ஆக உயர்ந்துள்ளது.

 

 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 3 பேர் உட்பட மொத்தம் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய 5 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்நிலையில் ராமநாதபுரத்தை சேர்ந்த 30 வயது போலீஸ்காரர், பனைக்குளம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரியும் சோகையன்தோப்பை சேர்ந்த தீணைப்பு வீரர், சூரங்காட்டுவலசையை சேர்ந்த சுகாதார ஊழியர் ஒருவர் என 3 பேருக்கும் மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

ஆகையால் 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் பணிபுரிந்த இடங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 3 பேர்களின் வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

 

 

இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்ட 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon