ஊராட்சி மன்ற தலைவி அம்சவள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் அறிக்கை !

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ஊராட்சி மன்ற தலைவி அம்சவள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியிருப்பதாவது: டி.கோணகாபாடி ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி சதீஷ்குமார் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மோகன் என்பவரை வன்மையாக கண்டிக்கின்றேன்.

 

சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டம், தாரமங்கலத்தை அடுத்த டி.கோணகாபாடி ஊராட்சிக்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சி மன்ற தலைவராக அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.டி.கோணகாபாடி ஊராட்சிக்கு உட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 22.04.2020 அன்று தலைவர் அம்சவள்ளி மற்றும் அவருடைய கணவர் சதீஷ்குமார் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சென்றுள்ளனர்.

 

அங்கு சென்ற அம்சவள்ளி அவர்களை அதிமுகவின் எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் மோகன் மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வழிமறித்து, சாதியின் பெயரை சொல்லி இழிவாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

 

அதுமட்டுமல்லாமல் ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி அவர்கள் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக நிர்வாகி மோகன் என்பவர் அடிக்கடி சாதியின் பெயரை சொல்லி இழிவுபடுத்தி வந்துள்ளார்
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்சவள்ளி அவர்கள் அமரும்போதும் சாதியின் பெயரைச் சொல்லி (நான் அமர்ந்த இடத்தில் சக்கிலிச்சி அமர்வதா) என்று இழி சொற்களால் பேசி வந்திருப்பது தெரிய வருகிறது.

ஊராட்சி மன்றத்தலைவி அம்சவள்ளியின் கணவர் சதீஷ்குமார் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக நிர்வாகி மோகன் மற்றும் ஒன்பது நபர்கள் மீது தாரமங்கலம் காவல்துறையினர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டத்தின் பணி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

இந்த வழக்கை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக நிர்வாகி மோகன் தூண்டுதலின் பெயரில் தனபால் என்கின்ற அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவரை வைத்து ஒரு பொய்யான புகார் கொடுத்து சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் மீதும் தாரமங்கலம் காவல்துறையினர் பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனர்.

 

இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் எடுத்துக்கொடுக்கும் அருந்ததியர் பெண்ணிடம் மோகன் என்பவர் தாரமங்கலம் எஸ்.பி.ஐ வங்கியில் சாதியைப் பற்றி இழிவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து இருப்பது அங்கு இருக்கின்ற சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்திருக்கிறது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

 

முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஆளும் கட்சியின் பொறுப்பாளர் என்றும் முதல்வரின் உறவினர் என்றும் கூறிக்கொண்டு அதிமுக நிர்வாகி மோகன் என்பவர் தொடர்ச்சியாக அருந்ததியர் மக்கள் மீது நடத்துகின்ற வன்முறை மற்றும் கொலை மிரட்டல் செயல்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல், மோகன் என்பவருக்கு ஆதரவாக செயல்படுவதோடு பாதிக்கப்பட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

 

அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் அம்சவள்ளி மற்றும் அவரது கணவர் சதீஸ்குமார் இருவரையும் சாதியை சொல்லி இழிவுபடித்தி பேசியதோடு, தரக்குறைவாக பேசி ஊராட்சிமன்ற தலைவரை பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டிய அதிமுக நிர்வாகி மோகன் மீது வழக்கு பதிவு செய்த பிறகும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பதுடன் வீடியோ ஆதரத்துடன் புகார் கொடுத்த பின்னும் கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது சட்டத்தின் மீதும் நீதித்துறை மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைக்கின்ற வகையில் சேலம் மாவட்ட காவல்துறை நடந்துகொள்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

காவல்துறையினர் உடனடியாக மோகன் என்பரை கைது செய்ய வேண்டும், சதீஷ்குமார் மற்றும் துணைத்தலைவர் பிரபு ஆகியோர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும், ஊராட்சி மன்றத்தலைவி அம்சவள்ளியின் குடும்பத்திற்கு உடனடியாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Leave a Reply