கொரோனாவிலிருந்து வெற்றி கண்ட நியூசிலாந்து..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனாவுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி கண்ட நியூசிலாந்து பொது முடக்கத்தை தடுத்துள்ளது. கொரொனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறி வரும் சூழலில் அதனை பக்குவமாக கட்டுப்படுத்தியுள்ளது நியூசிலாந்து. அங்கு ஆயிரத்து 469 பேருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் 82 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

270 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் இல்லா நிலையை நியூசிலாந்து அடைந்து விட்டதாக அந்நாட்டு சுகாதார துறை தலைமை இயக்குநர் ஆஷ்லே தெரிவித்துள்ளார்.

 

பிப்ரவரி 28ஆம் தேதி கொரொனா தொற்று நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நாட்டின் எல்லையை மூடி நியூசிலாந்து ஊரடங்கை அமல்படுத்தியது. கடந்த 9ஆம் தேதியே கொரொனா தொற்று கட்டுக்குள் வந்த போதிலும் கட்டுப்பாடுகளை தளர்த்தாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டது.

 

இதன் விளைவாக கொரொனாவால் பாதிக்கப்பட்ட புதிய நபர்களின் எண்ணிக்கை பல நாட்களாக ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கொரொனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்து இருப்பதை அடுத்து பொது முடக்க கட்டுப்பாடுகள் இன்று முதல் படிப்படியாக தரப்படுகின்றன.ஒரு மாதத்திற்கு மேலாக பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் உணவகங்களில் இருந்து பார்சல் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டிருப்பதால் சுமார் 4 லட்சம் பேர் அவரவர் பணிக்கு திரும்புகின்றனர். சில பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டன. நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் மே 11ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா யுத்தத்தில் வெற்றி கண்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.

 

கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டு இருப்பதால் நோய் தொற்று முழுமையாக முடிவுக்கு வந்ததாக அர்த்தமில்லை என கூறியவர், நோய் பரவலை தடுக்க விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.


Leave a Reply