சிக்கிம்,கோவாவைத் தொடர்ந்து மணிப்பூரும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமானது!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 2 பேர் குணமடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலங்கள் பட்டியலில் சிக்கிம், கோவாவைத் தொடர்ந்து மணிப்பூரும் இடம் பிடித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் முதன் முதலில் ஜனவரி 30-ந் தேதி கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டார் .அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதத்தில் இந்தியாவுல் டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா என ஒரு சில மாவட்டங்களில் மெதுவாகப் பரவத் தொடங்கியது.

 

மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் படுவேகமெடுக்க ஆரம்பித்து, இந்தியாவின் பெரும் பகுதி மாநிலங்களில் பாதிப்பு உறுதியானது. இந்தியாவில் சிக்கிம் மாநிலம் ஒன்று மட்டுமே கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக திகழ்ந்தது.

 

இந்தியாவில் தற்போதைய நிலையில் மகாராஷ்டிரா (4200), டெல்லி (2003), குஜராத் (1743), தமிழ்நாடு (1477), ம.பி., (1407) ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து, நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு17,615 ஆகவும், உயிரிழப்பு 559 ஆகவும் உள்ளது. உ.பி., மே.வங்கம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பெரிய மாநிலங்கள் பலவும் அதிக அளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

 

இதில், குறைந்த அளவு பாதிப்பாக கோவா மாநிலத்தில் 7 பேர், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் 2 பேர் என பாதிக்கப்பட்டிருந்தார், கோவாவில் பாதிக்கப் பட்ட 7 பேரும் குணமாகி விட்டதாகவும், தற்போது மாநிலத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று பெருமையாக தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில்கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலமும் கெரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் குணமடைந்து விட்டதாகவும், புதிதாக யாருக்கும் தொற்று பரவவில்லை எனவும் அம்மாநில முதல்வர் பைரன்சிங் தெரிவித்துள்ளார்.

 

இதன் மூலம் இந்தியாவில் சிக்கிம், மணிப்பூர், கோவா ஆகிய 3 மாநிலங்களும் கொரோனா இல்லாத மாநிலங்கள் என்ற பெருமையை பெற்றுள்ளன.


Leave a Reply