பத்திரப்பதிவிற்கு வருவோர் கண்டிப்பாக ” மாஸ்க் ” அணிந்து வர பத்திரப்பதிவு துறை அறிவுறுத்தல் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா எனும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை பாதிப்படைய செய்ததோடு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காவு வாங்கி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்தியாவில் இதுவரை 13,295 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.519 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.2301 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 105 ஆக எகிறியுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் அன்றாட கொரோனா நிலவரம் பற்றி சுகாதாரத் துறை சார்பில் தினமும் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு வந்தது.நேற்றைய தினம் சென்னையில் செய்தியாளர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இனிமேல் செய்தியாளர் சந்திப்பு கிடையாது எனவும், அறிக்கை மூலம் தகவல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக சுகாதாரத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் நேற்றைய மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால்
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உள்ளது. வீட்டுக்கண்காணிப்பில் 21,381 பேர் உள்ளனர். அரசுக்கண்காணிப்பில் 20 பேர் உள்ளனர் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மாவட்ட வாரியாக சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் மட்டும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சென்னையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. தஞ்சாவூரில் 10 பேருக்கும்,கோவையில் 5, திண்டுக்கல்லில் 5 , நெல்லையில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் சென்னையில் பாதிக்கப்பட்ட 50 பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் 2 பத்திரிகையாளர்கள், 2 காவல்துறையினர், 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் கோவை மக்களுக்கு ஒரு நற்செய்தியாக நேற்றைய ஒரே நாளில் மட்டும் 24 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் மட்டும் இதுவரை 53 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு ” டிஸ்சார்ஜ் ” செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.அன்று முதல் ஏப்ரல் 14 வரை என 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது.ஊரடங்கு காலத்தில் பத்திரப்பதிவு,வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப்பணிகளை மேற்கொள்வதற்காக மட்டுமே இயக்கப்பட்டன.ஊரடங்கிற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கவும் ஊரடங்கினை மே 3 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து ஊரடங்கும் உடனடியாக அமல்படுத்தப்பட்டு மக்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற எந்த ஒரு விஷயத்திற்கும் அனுமதிக்கப்படவில்லை.இந்த நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் சில நிறுவனங்கள் மட்டுமே குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் இயங்க விதிகள் தளர்த்தப்பட்டன.

 

அதன் ஒருபகுதியாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி மூடப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கத்துவங்கின.இருந்தும் பொதுமக்களில் பலருக்கு பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயக்கப்படும் விஷயம் தெரியாத காரணத்தால் குறைவான எண்ணிக்கையிலேயே பொது மக்கள் வருகை தந்தனர்.சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்,மக்கள் கைகளை சுத்தப்படுத்த வாஷ் பேசின் அமைக்க வேண்டும் என்பது போன்ற ஒரு சில நிபந்தனைகளுடன் பத்திரப்பதிவு அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று பத்திரப்பதிவு துவங்கியது.இருப்பினும் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படும் விஷயம் பொதுமக்களுக்கு தெரியாத காரணத்தால் குறைவான எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் வருகை தந்தனர்.

 

அரசு உத்தரவின்படி பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலா அறிவுறுத்தலின் படி பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும்,ப்ளீச்சிங் பவுடரால் கோடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்,பொதுமக்கள் கைகளை சுத்தப்படுத்தும் வகையில் வாஷ் பேசின்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் ராமமூர்த்தி கூறுகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பணியாளர்கள்,பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிய வேண்டும் எனவும்,பத்திர எழுத்தர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தியுள்ளதாகவும்,ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக முகக்கவசங்கள் கொடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும், பத்திரப்பதிவிற்கு வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,பத்திரம் பதிவு செய்வோர் மட்டுமே அலுவலகத்தினுள் அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply