மே 4 முதல் விமான போக்குவரத்தை தொடங்க தயாராகிறது ஏர் இந்தியா..! டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மே 4-ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தயாராகியுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதற்கு சில நாட்களுக்கு முன்னரே சர்வதேச விமானப் போக்குவரத்துக்கும் மத்திய அரசு தடை விதித்திருந்தது.

 

இந்நிலையில், 2-வது கட்டமாக மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்றும், குறிப்பிட்ட சில துறைகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பேருந்து,ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்துக்கான தடை மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் மே 3-ந்தேதி ஊரடங்கு முடிவடைந்தவுடன் அடுத்த நாள் முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தை நாடு முழுவதும் தொடங்க பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சர்வதேச விமானங்களை ஜுன் 1-ந் தேதி இயக்கவும் ஏர் இந்தியா தயாராகி உள்ளதாகவும், அதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.


Leave a Reply