கொரோனா நிவாரணம்: தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கவில்லை..! அறிவுறுத்தல் மட்டுமே என தமிழக அரசு புது விளக்கம்!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : கோப்பு படம்


ஊரடங்கால் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரணம் வழங்க தன்னார்வலர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை எனவும், அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்துள்ளது.

 

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏழை மக்கள் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை உணவுக்கே கூட பலரும் பிறரின் உதவியை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், தனி நபர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் என பலரும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது என உதவிகளை செய்து வருகின்றனர்.

 

ஆனால், தமிழக அரசோ நேற்று பிறப்பித்த உத்தரவு ஒன்றில், தன்னார்வலர்கள் உள்ளிட்ட தனியார் யாரும் உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை நேரடியாக வழங்க தடை விதிப்பதாக அறிவித்தது. இப்படி தனியார் நிவாரணம் வழங்கும் போது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மீறப்படுவதாகவும், எனவே நிவாரணம் வழங்குபவர்கள் அந்தந்தப் பகுதி அரசு நிர்வாகத்திடம் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

 

தமிழக அரசின் இந்தத் திடீர் உத்தரவுக்கு பல தரப்பிலும் பெரும் கண்டனங்கள் எழுந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் சர்வாதிகாரத்னைத்தை காட்டுகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனோ, என் அரசு ஏழை மக்களுக்கு உதவுபவன் கைகளையும் தட்டி விடுகிறது என சாடியிருந்தார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனோ, தமிழக அரசின் செயல் மனிதாபிமானமற்றது என விமர்சித்திருந்தார்.

 

திமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் , சமூக ஆர்வலர்கள் என பலரும் தமிழக அரசின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திமுக தரப்பில் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடும் செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக அரசு தமது உத்தரவில் இருந்து திடீரென பல்டி அடித்துள்ளது. நிவாரண உதவிகள் வழங்க, தன்னார்வலர்கள் யாருக்கும் தடை விதிக்கவில்லை. தற்போதைய சூழலில் தன்னார்வலர்கள் நேரடியாக உதவி செய்யும்போது அவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தன்னார்வலர்கள் நிவாரண உதவிகளை அந்தந்தப் பகுதி அரசு நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தலை மட்டுமே வழங்கியுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply