--- --:--:-- --

கொரோனா வைரசுக்கு பலியானோருக்கு சீனாவில் 3 நிமிடம் அஞ்சலி..! ஒட்டுமொத்த தேச மக்களும் மரியாதை!!

11

கொரோனா வைரசின் பிடியிலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொடுத்து மீண்டெழுந்துள்ள சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு இன்று 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

உலகை ஒட்டுமொத்தமாக நடுநடுங்க வைத்துள்ள கொலைகார கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில் தான். அந்நாட்டின் ஹீபே மாகாணத்தில் உள்ள ஊகான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் 19-ந் தேதி பரவத் தொடங்கியது கண்டறியப்பட்டது. இந்த வைரசுக்கு கோவிட் – 19 என பெயரிட்ட சீனா, இந்த கொடிய வைரசுக்கு எதிராக 3 மாத காலமாக கடும் போராட்டம் நடத்தியது.

 

உலகிலேயே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனா, உலக பொருளாதாரத்திலும் முன்னணி வகிக்கும் நாடாக திகழ்ந்ததால், தனது முழு சக்தியையும், ராணுவ பலத்தையும் கொண்டு பெரும் போராட்டம் நடத்தியது.

 

தனது அத்துனை சக்தியையும் பயன்படுத்தி படாதபாடு பட்டு இந்த வைரஸை கட்டுப்படுத்திய சீனா, அதற்கு பரிசாக 3326 உயிர்களை காவு கொடுத்தது. வைரஸ் பாதிப்புக்குள்ளான 81639 பேரில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் குணமாகி விட்டதாக சீனா அறிவித்துள்ளது. ஆனாலும் நேற்று கூட சீனாவில் 19 பேருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதில் 18 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

 

ஒரு வழியாக கொரோனா பிடியிலிருந்து மீண்டுள்ள சீனா இப்போது சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. சுற்றுலா இடங்கள் அனைத்தும் திறந்து விடப்பட்டு, 3 மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கியிருந்த மக்கள் ஜாலியாக ஊர் சுற்றத் தொடங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், கொரோணா வைரஸ்சுக்கு பலியானவர்களை தியாகிகளாகப் போற்றும் வகையில், சீனாவில் இன்று நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டது.

 

இதையொட்டி சீனாவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 10 மணிக்கு ஒட்டுமொத்த தேசமே 3 நிமிடங்களுக்கு அஞ்சலி செலுத்தியது. கார், ரயில், கப்பல்கள் சைரன் ஒலி எழுப்ப தெருவோரங்களில் இருந்த மணிக்கூண்டுகளில் மணியோசை சத்தம் எழுப்பப்ப சாலையில் சென்றவர்கள் அனைவரும் ஸ்தம்பித்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

 

இந்த கொடிய வைரஸ் தாக்கத்தில் இருந்து சீனா விடுபட்ட நிலையில், இப்போது உலகின் எஞ்சிய ஒட்டுமொத்த நாடுகளும் கொரோனா அச்சத்தில் நடுக்கத்தில் உறைந்து போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon