இந்து முன்னணி சார்பில் கோவை மாநகரம் முழுவதும் சாலையோரம் வசிக்கும் 5000 பேருக்கு உணவு !!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயரிழந்துள்ளனர்.இந்த நிலையில் இந்தியாவிலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 லிருந்து 62 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 478 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகி உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.144 தடை உத்தரவால் சாலையோரம் வசிப்போர்,ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு இந்து முன்னணி சார்பில் கோவை மாநகரம் முழுவதும் சாலையோரங்களில் வசிப்போர்,ஆதரவற்ற ஏழை , எளிய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவு வழங்க திட்டமிடப்பட்டது.அதனடிப்படையில் இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் தலைமையிலான இந்து முன்னணியினர் இன்று வேலாண்டிபாளையம் பகுதியில் உணவினை சமைத்து மக்களுக்கு விநியோகிக்க பொட்டலங்களை கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

 

இப்பணியானது இன்று முதல் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை சுந்தராபுரம், குனியமுத்தூர், காந்திபுரம், இடையர்பாளையம் , வேலாண்டிபாளையம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தினமும் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா,மாவட்ட மொத்த காய்கறிகள் வியாபாரிகள் சங்க தலைவர் பழனிச்சாமி,கோட்ட பொறுப்பாளர் சதீஷ்,மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால்,தொழிலதிபர் ராஜேந்திரன்,மார்க்கெட் முருகேசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply