“ஹலோ சூடா 4 சமோசா வேணும்..!” கொரோனா விபரீதம் புரியாமல் ஹெல்ப் லைனில் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு நூதன தண்டனை..! உ.பி.யில் நடந்த ருசிகரம்!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா பீதியால் நாடே அலறிக் கிடக்க, உ.பி.யில் மாவட்ட நிர்வாகத்தின் அவசர உதவி எண்ணில் சமோசா வேணும் என தொடர்ந்து தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு சமோசாவையும் கொடுத்து, சாக்கடையை செய்யுமாறு நூதன தண்டனையும் வழங்கிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பீதியால் உலகமே அலறிக் கிடக்கிறது இந்த வைரஸ் பரவாமல் தடுக்க உலக மக்களில் பெரும் பகுதியினரை வீடுகளுக்குள் முடங்கச் செய்ய கடுமையான உத்தரவுகளை அனைத்து நாடுகளும் பிறப்பித்து மக்களை வெளியில் நடமாட தடை விதித்துள்ளன.

 

இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் 130 கோடி மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருங்கள்; அத்தியாவசிய , அவசிய தேவைகளுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசை வீட்டிலிருந்தே தொடர்பு கொள்ள பல்வேறு ஹெல்ப்லைன் தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உ.பி.மாநில அரசும் மாவட்டந்தோறும் ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது.

 

ஆனால், நம் மக்களோ நாடு என்ன விதமான அச்சமான சூழலில் உள்ளது என்பதை பொருட்படுத்தாமல், இந்த ஹெல்ப்லைன் தொடர்பில் வந்து பர்கர் வேணும்.. பீட்சா வேணும்.. சமோசா வேணும் என்ற ரீதியில் அதிகாரிகளுக்கு கொடுக்கும் தொந்தரவுகளும், தொல்லைகளும் கொஞ்சமல்ல என்று கூறப்படுகிறது.

இப்படித்தான், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், எனக்கு 4 சமோசா வேணும் என தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதிகாரிகளும் இப்படியெல்ல தொல்லை கொடுக்கக் கூடாது; அவசர, அவசியத் தேவைகளுக்கு மட்டுமே தொடர்பு கொள்ளுமாறு அந்த இளைஞருக்கு அட்வைஸ் செய்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் கேட்காத அந்த இளைஞர், சமோசா வேணும் என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்துள்ளார்.

 

இந்த தொல்லையை அந்த மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு செல்ல, ஆட்சியரோ சமயோசிதமாக ஒரு உத்தரவை போட்டது தான் இப்போது சபாஷ் என்ற பல தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.அப்படி ஆட்சியர் போட்டது என்ன உத்தரவு தெரியுமா? இளைஞர் கேட்ட 4 சமோசாவுடன் கூடுதலாக சட்னியும் கொடுங்கள்; சமோசாவை சாப்பிட்டவுடன், அதற்குப் பதிகாரமாக அந்தப் பகுதியில் உள்ள சாக்கடையை நாள் முழுவதும் சுத்தப்படுத்தும் பணியை தண்டனையாக கொடுங்கள் என்பது தான் உத்தரவு .

 

அதிகாரிகளும் அந்த இளைஞரை தேடிக் கண்டு பிடித்து இந்தாப்பா நீ கேட்ட சமோசா என்று பவ்யமாக கொடுத்து சாப்பிடச் செய்து விட்டு, அப்படியே கொத்தாக இளைஞரை தூக்கி வந்து சாக்கடை செல்லும் கால்வாயை சுத்தப்படுத்து என கலெக்டர் போட்ட உத்தரவை காட்டியுள்ளவை. வேறு வழியின்றி அந்த இளைஞர், சமோசா கேட்டதுக்கு இப்படிப்பட்ட தண்டனையா? என்று நொந்து போய் விறுவிறுவென தூய்மைப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதிகாரிகள் சுற்றி நிற்க, சாக்கடையை அந்த இளைஞர் சுத்தப்படுத்தும் புகைப்படத்தை மாவட்ட கலெக்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, விபரீதம் புரியாமல் விளையாடுவோருக்கு இப்படிப்பட்ட தண்டனை கிடைக்கும் உஷார் என பதிவிட்டுள்ளார். கலெக்டரின் இந்தப் பதிவுக்கு பலரும் சபாஷ் போட்டு வருகின்றனர்.


Leave a Reply