ஊரடங்கு உத்தரவு எதிரொலி : அனைத்து வங்கி கடன்களுக்கான மாதத் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்..! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பாதிப்புக்கு ஆளாகியுள்ள சிறு, குறு தொழில்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி பல்வேறு சலுகைகைள அறிவித்துள்ளது. முக்கியமாக 3 மாதங்களுக்கு அனைத்து வித கடன்களுக்கான மாதத் தவணைகளை (EMI) செலுத்த 3 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு . இதனால் நாடு முழுவதும் உற்பத்தி சார்ந்த அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளது. ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள் மாதாந்திர ஊதியம் பெறுவோர் உள்ளிட்ட நடுத்தர வர்க்கத்தினர் இந்த ஊரடங்கு உத்தரவால் தங்களது அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

இந்த பாதிப்பால் நாட்டில் ஒருவர் கூட உணவின்றி பட்டினி கிடக்கக் கூடாது, பாதிக்கக்கூடாது என்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ரூபாய் 1.70 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவித் திட்டங்களை அறிவித்தார்.

 

இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை விவரித்த சக்திகாந்த தாஸ், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறையினருக்கு சலுகைகளை அறிவித்தார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் விபரம் வருமாறு:

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ரிசர்வ் வங்கி தீவிரமாக கவனித்து வருகிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட குறையும். மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் வெகுவாக குறையும்.20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச பொருளாதாரமும் சரிவைச் சந்தித்து வருகிறது.

 

ரிவர்ஸ் ரெப்போ 4.9%ல் இருந்து 4%ஆக குறைக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் வாங்கிய தொகைக்கு கொடுக்கும் வட்டியும் 0.90 சதவிதம் குறைப்பு. கொரோனா பாதிப்பால் நிதித்துறையில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. விளைச்சல் அதிகரிப்பால் உணவுப் பொருட்கள் விலை வரும் நாட்களில் குறையும்.

 

வங்கிகளில் கடன் வாங்கியோர், அனைத்து வித கடன்களுக்கும் 3 மாதத்திற்கு மாதாந்திர தவணை செலுத்த கூடுதல் அவகாசம் வழங்கப்படும். தவணை செலுத்தாதவர்கள் மீது திவால் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது. அதே போல், புதிதாக கடன் வழங்குவதையும் வங்கிகள் குறைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவித்துள்ளார்.


Leave a Reply