உறவினர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற திருமணங்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று மக்கள் சுய ஊரடங்கு நடைபெற்று வரும் நிலையில், இன்று ஏற்கனவே நாள் குறிக்கப்பட்ட திருமணங்கள் உறவினர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றன. சென்னை வடபழனி கோவிலில் மிக எளிமையான முறையில் நெற்குன்றத்தை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.

 

இதில் மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர். அடுத்தவாரம் அவர்கள் திருமண வரவேற்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில் ஏழு திருமணங்கள் நடைபெற்றன. பிரம்மாண்டமாக நடைபெற இருந்த இந்த திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றன.

ஒவ்வொரு திருமணத்திலும் 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். பெரும்பாலான திருமணங்கள் மற்றொரு தேதிக்கு மாற்றப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத இந்த திருமணங்கள் மிக எளிமையாக நடைபெற்றன. நாகையில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருக்க திருமணம் அதிகாலை 5 மணிக்கு நடந்து முடிந்தது.

 

தனியார் திருமண அரங்கில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணப்பெண் மற்றும் மணமகனின் உறவினர்கள் குறைந்த அளவில் மட்டுமே கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அரசின் உத்தரவை மதித்து மணமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் காலை 7 மணிக்கு அவசர அவசரமாக மண்டபத்தை காலி செய்து விட்டு வெளியேறினர்.

இதேபோல கிருஷ்ணகிரியில் எட்டு பேர் மட்டுமே கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கிருஷ்ணகிரி சின்ன மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. மணப்பெண்ணின் பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோர்கள் என மொத்தம் எட்டு பேர் மட்டுமே இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


Leave a Reply