கொரோனா பரவுவது குறித்து ரஜினி தெரிவித்த கருத்து தவறு என புகார்
கொரொனாவை பரப்புதல் குறித்து தவறான தகவல்களை கூறியதாக நடிகர் ரஜினிகாந்தின் வீடியோவை டுவிட்டர் நீக்கியுள்ளது. மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்தியாவில் கொரொனா இரண்டாவது நிலையில் உள்ளதாகவும், அது மூன்றாவது நிலைக்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேரம் ஊரடங்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரஜினி தெரிவித்திருந்தார்.இத்தாலியில் இதேபோன்று கொரொனாவால் இரண்டாவது நிலையில் இருந்தபோது அரசுகள் கொடுத்த அறிவுறுத்தல்களை அந்நாட்டு மக்கள் ஏற்காதது தான் அங்கு அதிகமான பாதிப்பு ஏற்பட காரணம் என்றும் ரஜினி கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் கொரொனா மூன்றாவது நிலைக்கு செல்லாமல் தடுக்கவே 14 மணி நேர ஊரடங்கு என்று ரஜினி கூறியது உண்மைக்கு மாறான தகவல் என்று புகார்கள் எழுந்தன. மேலும் பலர் ரஜினி வீடியோ தவறான தகவல்களை பரப்புவதாக டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ரஜினியின் வீடியோவை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. சுமார் 57 லட்சம் பின் தொடர்பாளர்கள் கொண்ட ரஜினியின் பக்கத்திலிருந்து வீடியோ அகற்றப்பட்டுள்ளது டுவிட்டரில் விவாதப் பொருளாக உள்ளது.






