--- --:--:-- --

ராஜேந்திர பாலாஜியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு..! அடுத்து அமைச்சர் பதவிக்கும் ஆப்பு?

images

விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அதிரடியாக நீக்கி ஓபிஎஸ்., இபிஎஸ் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியின் அமைச்சர் பதவியும் பறிபோகலாம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதிமுக அமைச்சர்களில் தடாலடிப் பேச்சுகளுக்கும்,உருட்டல் மிரட்டல் பார்வைக்கும் பெயர் போனவர் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கட்சி மேடையாகட்டும் அல்லது பத்திரிகையாளர் இவர் உதிர்க்கும் வார்த்தைகள் எல்லாமே பகீர் ரகமாகத் தான். கையை வெட்டுவேன், நாக்கை அறுப்பேன், தலையை எடுப்பேன் என்ற ரீதியில் மிரட்டல் தொனி பேச்சுக்களால், மீடியாக்களுக்கு தீனி போட்டு வந்தார் ராஜேந்திர பாலாஜி. அது மட்டுமன்றி அதிமுக மேடைகளில் பிரதமர் மோடியை எங்க டாடி என ஏகத்துக்கும் புகழ்வதும், எதிர்க்கட்சித் தலைவர்களை படு மோசமாக வர்ணிப்பதுமான இவரது பாணியே தனி ரகம்தான்.

 

ராஜேந்திர பாலாஜியின் இப்படிப்பட்ட செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரை பல முறை கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவருடைய அமைச்சர் பதவி எந்த நேரமும் பறிபோகலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று ராஜேந்திர பாலாஜி வசமிருந்த விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியை பறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சமீபத்தில், விருதுநகர் மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜ வர்மனுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இது விருதுநகர் மாவட்ட அதிமுகவில் கோஷ்டிப் பூசலாக, அது குறித்த செய்தியை வெளியிட்ட குமுதம் வார இதழின் செய்தியாளர் வெட்டப்பட்டார். இந்த தாக்குதலின் பின்னணிக்கு ராஜேந்திர பாலாஜி தான் காரணம் எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதன் எதிரொலி தான் ராஜேந்திர பாலாஜியின் கட்சிப் பதவி பறிப்பு என்றும், விரைவில் அமைச்சர் பதவியும் பறிபோகலாம் எனவும் கூறப்படுகிறது.

 

ஜெயலலிதா மறைவுக்குப் பின், இந்த 3 வருடங்களாக கட்சி மற்றும் ஆட்சிப் பதவியில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் என யார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுத்ததில்லை. முதல் முறையாக ராஜேந்திர பாலாஜி மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon