வேப்பிலை,துளசி இலை கட்டி மஞ்சள் நீர் தெளித்த அரசுப்பேருந்து.கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க பேருந்து ஓட்டுநர்,நடத்துனரின் புதிய முயற்சி !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மத்திய,மாநில அரசுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தி வருகின்றன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்து நாடு முழுவதும் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

 

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 223 ல் இருந்து 298 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும்,இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் சில தினங்களுக்கு முன்பெ இந்தியாவில் உயிரிழந்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 98 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று காலை முதல் மார்ச் 31ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகள் முற்றிலுமாக மூடப்படுகிறது. வெளிமாநில வாகனங்கள் தமிழகம் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அத்தியாவசிய பொருட்களான பால்,பெட்ரோல்,மருந்துகள்,காய்கறிகள்,ஆம்புலன்ஸ்,கேஸ் சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்கள்,இதர சரக்கு வாகனங்கள்,இறப்பு போன்ற தவிர்க்க இயலாத காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள் மட்டுமே தமிழகத்தினுள் அனுமதிக்கப்படும் எனவும், பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக குறைந்த அளவிலான அரசுப்பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் புதிய முயற்சி பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.சமூக வலைத்தளங்களில் இந்த காணொலி வெகு வைரலாகி வருகிறது.

 

காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையம்,பேரூர்,மாதம்பட்டி,ஆலாந்துறை வழியாக நாதகவுண்டன் புதூருக்கு செல்லும் 14 ஆம் எண் கொண்ட பேருந்தை சுற்றிலும் துளசி,வேப்பிலை கட்டி பேருந்தின் உள்ளே மஞ்சள் நீரை தெளித்தும் பேருந்து முழுவதும் நம் முன்னோர்களின் காலத்தில் அம்மை நோய் வந்தால் வீட்டை சுற்றிலும் இது போல கட்டியது போல அமைத்திருப்பது பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நம் முன்னோர்கள் காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகாலை எழுந்து குளித்து முடித்த வீட்டு வாசலை மாட்டுச்சாணம்,மஞ்சள் கலந்த நீரை கொண்டு தெளித்து கோலமிடுவர்.இந்த நீரை தெளிப்பதன் மூலம் வீட்டிற்குள் விஷப்பூச்சிகள் நெருங்காது என்பது நமது ஐதீகம். அதே போல் அம்மை நோய் வந்து விட்டால் வீட்டின் நிலைவாசலில் துளசி,வேப்ப இலைகளை தோரணமாக கட்டி விடுவர்.மஞ்சளை அரைத்து அம்மை தழும்புகளுக்கு இடுவர்.இதனால் நோய் விரைவில் குணமடைந்து நலம் பெறுவர் என்பது நமது மரபு.

 

நமது முன்னோர்கள் பயன்படுத்திய துளசி,வேப்பிலைகளை கொண்டு தோரணம் கட்டியும்,மஞ்சளை தெளித்தும் கொரோனா நோயில் இருந்து தங்களையும்,மக்களையும் காக்கும் பொருட்டு இந்த அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் செயல் பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

நாமும் மாறுவோம் நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை மதித்து.


Leave a Reply