ம.பி., மாநில காங்.,அதிருப்தி எம்எல்ஏக்களை சந்திக்க அனுமதி மறுப்பு..! பெங்களூருவில் திக்விஜய்சிங் தர்ணாவால் பரபரப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டுள்ள ம.பி. மாநில காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் வகையில் சந்திக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தடுத்து நிறுத்தப்பட்ட்ர் இதனால் திக்விஜய்சிங் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் பாஜகவில் இணைந்துவிட்டார். தொடர்ந்து அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு முதல்வர் கமல்நாத்துக்கு அம்மாநில ஆளுநர் லால்கி தாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கடந்த திங்கட்கிழமை சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய போதும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், கொரானாவை காரணம் காட்டி சட்டப்பேரவையை 26-ந்தேதி வரை சட்டப்பேரவையை சபாநாயகர் ஒத்தி வைத்துவிட்டார். இதனால் மீண்டும் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்; இல்லாவிட்டால் ஆட்சி டிஸ்மிஸ் என்ற ரீதியில் கண்டிப்பு காட்டினார்.

 

ஆனால் நேற்றும் சட்டப்பேரவையை கூட வில்லை. இதற்கிடையே பாஜக தரப்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நேற்று விசாரணை நடைபெற்றது. ம.பி.முதல்வர் கமல்நாத், சபாநாயகர் பிரஜாபதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம், இன்றும் விசாரணையை தொடர உள்ளது.

 

இதற்கிடையே, ராஜினாமா செய்த 22 அதிருப்தி எம்எல்ஏக்களில் 6 பேரின் ராஜினாமா மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது. மீதி 16 பேரை சமாதானம் செய்து விடலாம் என முதல்வர் கமல்நாத் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்த 22 பேரும் பெங்களூரூவில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜகவினரின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 22 பேரும் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போதும், தாங்கள் ஜோதிராதித்யா பக்கம் தான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தனர்.

 

ஆனால் ம.பி.மாநில காங்கிரசார் சமாதான முயற்சிகளை தொடர்கின்றனர். இன்று காலை ம.பி.மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் பெங்களுருவில் எம்எல்ஏக்களை சந்திக்க நட்சத்திர விடுதிக்கு சென்றார். ஆனால் அவரை உள்ளே விடாமல் போலீசார் தடுத்து விட்டனர். இதனால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திக்விஜய் சிங், ஓட்டல் வாசலிலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோரும் போராட்டத்தில் குதிக்க அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேரம் தர்ணா நீடித்த நிலையில், திக்விஜய் சிங்கை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

 


Leave a Reply