--- --:--:-- --

கொரானா வைரஸ் சரியாகணுமா..? “பசு கோமியம்” குடிக்க வாங்க..! “டீ பார்ட்டி” போல “கோமியம் பார்ட்டி”க்கு “இந்து மகா சபா” ஏற்பாடு!!

4.1

கொரானா வைரசுக்கு மருந்தாக பசு மாட்டு கோமியம் குடிங்க எனக் கூறி, டீ பார்ட்டி நடத்துவது போல, டெல்லியில் கோமியம் பார்ட்டிக்கு இந்து மகா சபா என்ற இந்துத்வா அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பையும் கூடவே சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சர்வதேசங்களுமே கொரானா… கொரானா… என அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளன. சீனாவில் தொடங்கி கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் பெரும் பகுதிகளுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொடிய வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொட, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு மாற்று மருந்து கண்டுபிடித்து உரிய தீர்வு காண முடியாமல் உலக நாடுகளின் பெரும் விஞ்ஞானிகளும், மருத்துவ அறிஞர்களும் ராப்பகலாக திண்டாடி வருகின்றனர்.

 

கடைசியில் இந்த கொரானா தொற்று பரவாமல் இருக்க, இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவரை 14 நாட்கள் வரை தனிமைப்படுத்துவது ஒன்று தான் வழி என்று முடிவு செய்துள்ளனர். அது மட்டுமின்றி கை, கால்களை சோப்பு போட்டு கழுவுங்கள்; முகக் கவசம் அணியுங்கள்.. பொது வெளியில் கூட்டமாக கூடாதீர்கள்.. வெளிநாட்டுக்கு போக வேணாம்… ஜாலி சுற்றுலாவும் போகாதீர்கள்.. சாமி கும்பிட கோவிலுக்கும் போக தேவையில்லை.. என இப்படி ஏக தடைகள் போட்டு தன் நாட்டு மக்களை உலக நாடுகள் பலவும் அறிவுரை கூறி வருகின்றன.

 

இந்தியாவிலும் இந்த கொரானா பாதிப்பு இப்போது மிரட்டத் தொடங்கியுள்ளது. இதுவரை 85 பேருக்கு இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பும் 2 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தியேட்டர்கள் மூடல், விளையாட்டு போட்டிகள் ரத்து, கோவிலுக்கு வர வேண்டாம் என திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட பிரபல கோவில் நிர்வாகங்கள் கெஞ்சாத குறையாக பக்தர்களுக்கு வேண்டுதல் விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இப்படி உலக நாடுகள் கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாட்டம் போட, பழமையில் ஊறிப் போன நம்மூர் ஆட்கள் இதற்கு தீர்வு சொல்வது போல புதுப்புது வைத்தியங்களை கூறி வருகின்றனர். இதில் ஒரு பகீர் ரகம்தான் பசு மாட்டு கோமியம் குடித்தால் கொரானா வரவே வராது என ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. பிற உயிர்களை கொன்று மாமிசம் உண்பவர்களுக்கு தான் கொரானா வருகிறது. உயிர்களை கொல்பவர்களுக்கு கடவுளின் தண்டனை தான் இந்த கொரானா வரும். சைவம் சாப்பிடுபவர்களுக்கு கொரானா அண்டவே அண்டாது என புது விளக்கம் வேறு கொடுத்து, தீர்வாக பசுமாட்டின் கோமியம் குடித்தால் சரியாகிவிடும் என்றும் கூறி வருகின்றனர்.

 

இதனை விளம்பரப்படுத்தும் வகையில் அகில இந்திய இந்து மகா சபா என்ற அமைப்பு டெல்லியில் டீ பார்ட்டி போல, கோமுத்ரா பார்ட்டி என்ற பெயரில் கோமியம் குடிக்கும் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கலர்புல் போஸ்டர்களையும் அச்சிட்டுள்ளனர். இந்தப் பார்ட்டியில் அண்டா அண்டாவாக பசு கோமியம் வழங்க கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட கேக்குகளும் விநியோகிக்க உள்ளனராம். இந்த கோமியம் பார்ட்டி, இன்று நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் உள்ள இந்து மகாசபா தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் சக்ரபாணி மகாராஜ் தலைமையில் நடக்க உள்ள நிலையில், விஞ்ஞானம் முன்னேறிய உலகில் இன்னும் பிற்போக்குத்தனமா? என ஏகப்பட்டு விமர்சனங்களும் எழுந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon